Wednesday, 24 October 2012

வல்லமை தாராயோ


அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்.
     சமூக வலைத்தளங்களில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது பாடகி கொடுத்த ஒரு புகாரினால். நடப்பது நடக்கட்டும். நீதி மன்றத்தில் தமிழர்களுக்கு நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பில் எனது பதிவை தொடங்குகிறேன்.

     என் வீட்டுக்கு அருகில் ஒரு சின்ன அம்மன் கோவில் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள், நவராத்திரி காலத்தில் தினமும் கோவிலுக்கு செல்வது வழக்கமாயிற்று. கோவிலில் நாள்தோறும் அம்மனுக்கு ஒரு அலங்காரம் இருக்கும். இன்று “விஜயதசமி”. அம்மனுக்கு நவரத்தின அலங்காரம் மற்றும் அம்பு விடும் நிகழ்ச்சி என்பதினால் நானும் சென்றேன்.

ஒவ்வொரு வீட்டிலும் பெண்மணிகள் முறையாக சேலை உடுத்தியும், சிறு பெண்கள் தாவணி உடுத்தியும் வந்திருந்தார்கள். (பெங்களூரில் !!!) நமது கலாசாரம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

அம்மன், அலங்காரம் முடித்து துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்தாள். கருவறைக்கு வெளியே அனைவரும் ஒன்று கூடி அம்பு விடும் நிகழ்ச்சிக்காக காத்து கொண்டிருந்தார்கள்.
இங்கே சுவாமியை பற்றி நான் விவரிக்க போவதில்லை. கோவிலுக்கு வந்த சில மனிதர்களின் அறியாமையும், என்னோட அலட்சியத்தையும் மட்டும் விவரிக்க போகிறேன்.

1. மனிதர்கள் சிலர், இடத்தை பிடித்த மகிழ்ச்சியில், அடுத்தவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ என்ற கவலை இல்லாமல் தம் கண்களுக்கு தெரிந்தால் போதும் என்ற சுயநலத்தில் நன்றாக மறைத்து கொண்டு சாமியையும் பார்க்காமல் ஏதேதோ பேசிகொன்றும், கேளி இட்டு கொண்டும் நின்றுருந்தார்கள். –சிலர் அமர்ந்து இருந்தால் பல பேருக்கு புண்ணியமாக இருந்து இருக்கும்.

2. அம்பு விட்டாயிற்று. நான் அந்த நிகழ்ச்சியை நேராக கண்ணால் பார்க்க முடியவில்லை. நான் கொஞ்சம் உயரம் அதிகம்(6.0) என்பதாலும் எனக்கு பின்னாடி நிற்கும் பலரை மறைப்பேன் என்ற காரணத்தினாலும் நான் தொலைவில் நின்றவாறு பார்த்து கொண்டிருந்தேன். - அம்பு விட்டதுக்கு பிறகு “வன்னி” மரத்தின் இலையை எடுத்து பர்சிலோ, வீட்டு கஜானாவிலோ வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். 
அங்கே ஆரம்பித்தது கொடூரம். ஒவ்வொருவரும் தனக்கு எட்டிய கிளையை இழுத்து பறிக்க ஆரம்பித்தார்கள். போட்டியாக மாறியது. சிறு குழந்தைகள் தானும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினால் எட்டி எட்டி பறிக்க ஆரம்பித்தார்கள். சில பெரியவர்கள் கை நிறைய பறித்து வெற்றி (!) திரு முகத்துடன் சென்றார்கள். சிறிது நேரத்தில் ஏழு அடிக்கு கீழ் தனது செல்வதை இழந்து மொட்டையாக நின்றது மரம்.

3. அம்புவிற்கு பிறகு கோவிலின் ஐயர் அம்மனின் உலோகச்சிலையை காலில் ஆணியுடைய காலணியோடு கோவிலை சுற்ற ஆயத்தபட்டார். பெரும்பாலோனோர் ஐயர் கூட செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் நெருக்கடி ஏற்பட்டது. நாகச்சிலை உள்ள சுவாமியானது எவ்வாறோ கை நழுவிற்று போலும். தவறிற்று. எல்லோரும் முகத்தில் ஒரு அமைதியான கலவரம். பிறகு அவரவர் ஒதுங்கி கொள்ள கருவறையை ஒட்டி இனிதே நிறைவுற்றது அம்மனின் மூன்று சுற்றுகள்.

4. கருவறையின் உள்ளே இருக்கும் மறைப்பு நீக்கப்பட்டது. மக்கள் அனைவரும் தரிசனம் (நவரத்தின அலங்காரம்) முண்டியடித்து முன்னே சென்றார்கள். நான் அவர்கள் அனைவரையும் பார்த்தவாறே கோடியில் நின்றேன். உயரம் என்பதினால் அம்மன் நவரத்தின அலங்காரத்தில் மிக அருமையாக காட்சி அளித்ததை சிரமம் இல்லாமல் பார்க்க முடிந்தது.

மக்கள் அனைவரும் கையில் உள்ள சிறு ஆரத்தி தட்டில் மூன்று முதல் ஒன்பது வரையில் எலுமிச்சை விளக்குகளை கையில் ஏந்தி சுவாமிக்கு  அருகில் காட்ட தயாராகினர். கோவிலின் கருவறையோ குறுகிய ஒன்று. சேலை கட்டிய தாய்மார்கள் கையில் பொருத்தப்பட்ட விளக்கோடு அவ்வளவு அருகில் நின்றது பெரும் அச்சத்தை அளித்தது. ஒருங்கிணைப்பிற்கு ஆட்கள் யாரும் இல்லை. அம்மன் அருளினால் எந்த வித அசம்பாவிதமும் நடைபெற வில்லை. விநாயகருக்கு, அம்மனுக்கு அவர்களின் கையாலே நேரிடையாக ஆரத்தி எடுத்து (இந்த கோவிலின் நடைமுறை) வெளியே வந்து, வன்னி மரத்திற்கு ஒரு சுற்று காண்பித்து, தீபம் வைக்கும் இடத்தில் வைத்தனர். ஒவ்வொருவரும் முகத்தினை பார்த்தேன். அவர்களின் தெளிவான முகம் அவர்களின் அகத்தின் தெளிவை காண்பித்தது.

5. இறுதி கட்டம். – அன்னதானம். கேட்கவா வேண்டும்? முதல் இரண்டு நிமிடங்கள் ஒரே ஒரு வரிசை மட்டுமே இருந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் வரிசை இல்லை. பெரிய கும்பல் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. வருபவர்கள் அனைவரும் வரிசையில் நிற்காமல் முண்டியடித்து முதலில் வாங்குவதையே செய்தனர் (விரும்பினர்). வரிசையில் நின்றவர்களோ வரிசையில் நின்ற படியே இருந்தார்கள். பரிமாறுபவர்கள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. கூட்ட நெரிசலினால் காகித தட்டில் வாங்கப்பட்ட அன்னம் கீழே சிந்தியது. அன்னலட்சுமி பெரும்பாலோனோர் கால்களினால் மிதிபட்டாள். இதை எதையும் சட்டை செய்யாமல் வாங்குபவர்கள் வாங்கியபடியும், சிந்தியதை மிதித்தபடியும் சென்றனர். சற்றேனும் நேரத்தில் மக்கள் ஒழுக்கத்தை கை விட்டு அன்னதிற்காக அவசரப்பட்டது பலரின் அமைதியை குலைத்தது. இறுதியாக கோவிலை விட்டு வெளியேறி விட்டேன்.


நான்:


இவ்வாறு ஒரு பதிவை எழுதியதற்கு முழுதும் வெட்கபடுகிறேன். இவை அனைத்தும் சின்ன சின்ன விசயங்களே. நான் அங்கு என்ன செய்திருக்க வேண்டும்? 
  1. கண்ணால் அனைத்தையும் பார்த்த நான் மக்களை ஒருங்கிணைப்பதில் முயன்டிருக்க வேண்டும்.  
  2. அம்பு விடும் போது, சிறுது சப்தம் எழுப்பி அனைவரையும் அமர சொல்லிருந்தால் அனைவரும் கண்டிப்பாக அமர்ந்திருப்பார்கள். அனைவருக்கும் நல்ல தரிசனம் கிடைத்திருக்கும்.
  3. சுவாமி புறப்பாடு போது நான் அங்கு சென்று சுவாமி செல்லும் வழியை சீர் படுத்தியிருந்தால் மக்கள் சிறிதளவேனும் நகர்ந்து விழா இலகுவாக நடக்க ஏதுவாய் இருந்திருக்கும்.
  4. கோவிலில் என் வயதை ஒத்த பல இளைஞர்கள் இருந்தார்கள். நான் சிறிது முயன்றிருந்தால் அவர்களின் உதவியோடு இன்னும் சிறப்பாக மக்களை ஒருங்கினைத்திருக்கலாம்.
  5. அன்னதானம் செய்த போதே நான்கு நண்பர்கள் சேர்ந்து மனித சங்கிலி போல் ஒன்று அமைத்து இருந்தால் ஒரே ஒரு வரிசையில் நல்ல படியாக அன்னதானம் சேதாரம் ஆகாமல் பக்தர்கள் கையில் சேர்ந்திருக்கும்..


இதெல்லாம் செய்திருக்க வேண்டும். செய்யாததற்கு பெரிய காரணம் மொழிப்பிரச்சினை-யை (கன்னடம்) காரணம் காட்டுவது சப்பை கட்டு கட்டுவது போல் இருக்கும்.
  • என்னமோ ஒரு பயம். மனதினுள் ஒரு பெரிய வேகத்தடை. ஒன்னும் செய்வதற்கு அறியாமல் வேடிக்கை பார்த்துகொண்டு நின்ற என்னை கோழை என்றும் சொல்லலாம். (சொல்ல வேண்டும்!!)
  • மனிதனாக பிறந்து விட்டோம், போகும் முன் முடிந்த வரை நல்லது செய்து விட்டு செல்ல வேண்டும் என்ற நினைப்பு மனதளவில் இருக்கு. செயலில் ஈடுபடுத்துவதில் அவ்வளவு கடினமா இருக்கு.
  • அரை மணி நேரம் சும்மா நின்று வேடிக்கை பார்க்காமல் முயற்சி எடுத்திருந்தால் வந்திருந்த அனைவருக்கும் நம் கலாசாரத்தின் மீது பற்று இன்னும் அதிகமாயிருக்கும். நிம்மதி கிடைத்திருக்கும். கோவிலுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.
  • பல வளரும் தலைமுறையினர் என்னை பார்த்து அவர்களில் சிலரேனும் இதை போல் ஒரு நல்ல முயற்சியில் எதிர்காலத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.

ஒன்றும் நடக்க வில்லை. இதை போல் ஒரு விஷயம் இனி எப்போது நடந்தாலும் முன்னின்று உதவி செய்வதற்கும், மனதினுள் எழுவதை செயலில் கொண்டு வருவதற்க்கும் வேண்டி கொண்டேன் கடவுளிடம். “வல்லமை தாராயோ” என்று!!!!


இடம்: பெங்களூர்                                                                                                                         நான்
நாள்: 24-10-2012                                                             வி.கார்த்திகேயன்

PS: புகைப்படம் எதுவும் எடுக்க கூடாது என்ற காரணத்தினால் மட்டுமே எடுக்க வில்லை. இங்கே பகிரப்படவில்லை. கண்ணால் பார்த்ததை வார்த்தையால் விவரித்துள்ளேன். ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டவும். நன்றி.